இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு மீண்டும் கூட்டி மாற்று வழியை சிந்திக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போரை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கே வந்து நிராகரித்து விட்டார். பின்னர் இலங்கைக்கு சென்றதும் அங்கு போர் தீவிரமடைந்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று இந்தியா அழுத்தம் திருத்தமாக செல்ல வேண்டும். இதற்கு இணங்காவிட்டால், தமிழர்களின் உரிமைக்கான விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்போம் என்று எச்சரிக்கை விட வேண்டும்.
குறைந்தபட்சம், மனிதாபிமான அடிப்படையில் இலங்கை இனசிக்கலை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திக்கு கொண்டு சென்று, அதன் தலையீட்டை கோர வேண்டும். இல்லை எனில் இலங்கை பிரச்சனை தீராது.
பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காணமுடியும். மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்த வர இலங்கை அரசை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
இலங்கை இன சிக்கல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது. இதில் பா.ம.க. தலைவர் கலந்துகொள்வார்.
இந்தியாவுக்கு எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவை இலங்கைக்கு அதிகபட்ச ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. இதை அனுமதிக்க முடியாது. இது இந்தியாவுக்கு எதிரான நிலைபாடு. இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு ஏற்பட்டால் இந்தியாவுக்கு நேசநாடாகத்தான் இருக்கும்
சட்டபேரவை நடந்த போது இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றின. இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை மாநில அரசு கூட்டுவது சரியாக இருக்கும். தமிழகத்தின் ஒட்டு மொத்த முடிவை கூற, அனைத்து கட்சி கூட்டத்தை மீண்டும் ஒரு முறை மாநில அரசு கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், "தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றும் கூறினார்.