இலங்கை தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம் சாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்துக்குள்ளாக இலங்கை அதிபர் ராஜபக்சே, 'ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்துவோம்' என்று டெல்லியில் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்புக்கு மத்திய அரசின் நிலைப்பாடுதான் காரணம். இலங்கையில் 3 லட்சம் தமிழ்மக்கள் ராணுவ தாக்குதலுக்கும், குண்டு வீச்சுக்கும் நடுவில் மரண பீதியில் துடிக்கின்றனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை, முதல்வர் கருணாநிதி ஏன் வற்புறுத்தவில்லை? இலங்கை தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழ் இனத்துக்கு மத்திய அரசு செய்துள்ள துரோகம், தமிழக மக்களை குமுறும் எரிமலையாக மாற்றும். போர் நிறுத்தம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்காமல், அதற்கு உரிய அரசியல் அழுத்தத்தை தமிழக முதல்வர் ஏற்படுத்தாமலேயே பிரச்னையை திசை திருப்பும் வகையில் தந்திரமாக சில நடவடிக்கைகளை கையாளுகிறார்கள்.
ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்பு கவசம் விடுதலைப்புலிகள்தான். அவர்களை அழித்துவிட்டால், தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளிவிடலாம் என்பது இலங்கை அரசின் திட்டம். அதற்கு இந்தியா உடந்தையாக இருக்கிறது" என்று வைகோ கூறியுள்ளார்.