2006 செப்டம்பர் மாதம் வரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் கடலூர் மண்டலத் துணை இயக்குநர் மு.மனோகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2004-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2006 செப்டம்பர் வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், 2005 டிசம்பர் வரை 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் ஆகியோரின் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட இருக்கிறது.
எனவே மேற்கண்ட காலத்தில் தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறாமல் இருந்தால், தங்கள் பெயர், பிறந்த தேதி, தேர்வு எழுதிய பதிவு எண், மாதம், ஆண்டு, தேர்வு மையத்தின் பெயர், தேர்வு எழுதிய பாடங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய மனுவுடன் வீட்டு முகவரியை எழுதி, ரூ.30-க்குத் தபால் தலை ஒட்டிய உறையுடன் இணைத்து, கடலூர் புதுப்பாளையம் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
27-ம் தேதிக்குள் மனுக்களை அனுப்பி, சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேற்படி தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு அழிக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.