மதுரை புறநகர்ப் பகுதியில் வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மதுரையில் திராவிட விழிப்புணர்வுக் கழகத்தினர் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மதுரை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் அரசுப் பேருந்துகளின் மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டு வருகின்றன. ஒரு பேருந்து எரிக்கப்பட்டது. இதனால் மதுரையில் தற்போது இரவு நேரப் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை வாடிப்பட்டியில் இருந்து கொடை ரோடு சந்திப்பு வரையிலும், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் இருந்து ஆண்டிப்பட்டி கணவாய்ப் பகுதி வரையிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.
பேருந்து மீதான தாக்குதல் வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.