இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்க வரும் 17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, போரை நிறுத்த தாங்கள் தயார், சிறிலங்க அரசுதான் போரை தொடங்கியது, தாங்கள் தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தி வருகிறோம் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், இலங்கை அரசும் உடனடியாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா வந்த சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சே, கடந்த 13ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தமுடியாது என்றும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
இதையடுத்து, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்க வரும் 17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் இன்று அறிவித்துள்ளார்.