தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒரே நாளில் 19 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை மாநகர காவல் (சென்னை புறநகர் பகுதிக்கு செயற்பாடு நீட்டிப்பு) சட்ட முன்வடிவு, முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சம்பளம் உயர்த்துவது குறித்த தமிழநாடு சம்பளங்கள் வழங்கள் (2-ஆம் திருத்த) சட்ட முன்வடிவு, கிறிஸ்தவர்களுக்கான 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை விலக்கிக் கொள்ளும் சட்ட முன்வடிவு உட்பட மொத்தம் 19 மசோதாக்களும், பேரவையில் இறுதி நாளான நேற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
கடந்த 10ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இறுதி நாளான நேற்று பேரவை நிகழ்ச்சிகள் காலை 9.30 மணியில் இருந்து பிற்பகல் 2.59 மணி வரை நீடித்தது.
இதையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் க.அன்பழகன் கொண்டு வந்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.