தமிழகத்தில் பெரம்பலூர்- தஞ்சாவூர், மதுரை-தொண்டி சாலைப் பிரிவுகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் இருந்து மானாமதுரையை இணைக்கும் சாலை ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை 226-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 247 கிமீ நீளமுடைய பெரம்பலூர்- தஞ்சாவூர் சாலை இணைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்படுகிறது. பெரம்பலூரில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 85.4 கிமீ சாலையும் புதிய தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்படுகிறது.
பெரம்பலூரில் இருந்து துவங்கும் இந்த சாலை குன்னம், அரியலூர், கீழபழுவூர், திருமானூர், திருவையாறு, கண்டியூர் ஆகிய முக்கிய இடங்களை இணைக்கும் சாலையாகும். இது தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலை 226-வுடன் இணையும் சாலையாகும்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிகள் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக மையங்களாக இருப்பதுடன் மாவட்ட தலைநகரங்களாகவும் உள்ளன. இதே போன்று திருவையாறு முக்கிய திருத்தலங்கள் நிறைந்த மற்றும் பண்பாட்டு மையமாக உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை 67 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 45-வுடன் இணைகின்றது.
இதோடு கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான தொண்டியை மதுரையுடன் இணைக்கும் சாலையும் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் 210, 226, 45பி, 49 மற்றும் 7 ஆகியவற்றை இந்த நகரம் இணைக்கின்றது.
இதன் காரணமாக சிறிய துறைமுகமான தொண்டியில் வர்த்தக போக்குவரத்து பெருமளவில் வளர்ச்சியடையும். இந்த சாலை முக்கிய கோயில் நகரங்களான மதுரை, சிவகங்கை, திருவாடாணை, காளையார்கோயில் போன்றவற்றை இணைக்கின்றது. இதன் மூலம் இந்த நகரங்களுக்கு சுற்றலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.