சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்த மோதலில் 3 மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் இரண்டு பிரிவு மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலில் ஆறுமுகம், பாரதி கண்ணன், அய்யாத்துரை ஆகிய 3 மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு, படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் துறையினரின் கண் எதிரே நடந்துள்ள இந்தத் தாக்குதல் குறித்துச் சென்னையை சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தது.
இதனடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியுள்ள தாக்கீதில், சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.