மதுரையில் தாழ்தள சொகுசு பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் நன்மாறன் தெரிவித்த புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.
சட்டபேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் நன்மாறன் கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நேரு, "தாழ்தள சொகுசுபஸ் சென்னை, மதுரையில் ஓடுகிறது. விருதுநகர், திருச்சி, விழுப்புரம், கும்பகோணம் பகுதிகளில் சாதாரண பேருந்து பற்றாக்குறை காரணமாக தாழ்தள பேருந்து இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஓடும் 20,000 பேருந்தில், 867 பேருந்துகள் தாழ்தள சொகுசு பேருந்தாகும். சென்னையில் 564, மதுரையில் 225 தாழ்தள பேருந்தும் இயக்கப்படுகிறது.
அதிக கட்டணம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போதுகூட அதிக வசதி இருப்பதால் அதிக கட்டணம் பரவாயில்லை என்றுதான் தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.