இலங்கையில் விடுதலைப் புலிகளையும், அப்பாவித் தமிழர்களையும் ஒருசேர அழிக்கப்பார்க்கிறார் ராஜபக்ச என்று கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, அவர் அளிக்கும் உறுதிமொழிகளை நம்பி ஏமாந்துவிடவேண்டாம் என்று பிரதமரை எச்சரித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் மீது இன்று நடந்த விவாதங்களுக்கு இறுதியில் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, “முதலில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் வீடுகள், ஆலயங்கள் எதுவுமே தாக்குதலிற்கு ஆளாகக் கூடாது. இதற்கு ராஜபக்ச உத்தரவாதம் தரத் தயாராக இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“தமிழர்களை காக்கும் பொறுப்பை நான் தட்டிக் கழிக்க மாட்டேன் என்றும் ராஜபக்ச சுவைபட சொல்லியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார். இதனை மத்திய அரசு தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இலங்கைப் பிரச்சனையை ராஜபக்ச இரண்டாக பிரித்துப் பார்க்கிறார். தமிழர்கள் மீது எங்கள் படைத் தாக்காது, குண்டு வீசாது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த முடியாது என்று அவர்கள் நடத்துகிற யுத்தத்தையே இரண்டாக பிரித்துச் சொல்கிறார்” என்று கூறியுள்ள கருணாநிதி, “விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் அது இலங்கைத் தமிழர்கள் மீதும், தமிழர்கள் மீது குண்டு வீசினால் அது விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். எனவே இரு பிரிவினரையும் ஒருசேர அழிக்க ராஜபக்ச யுத்தம் புரிகிறார். அவர் காலக் கெடு கேட்டதன் நோக்கம் நமக்குப் புரிகிறது. இதில் பிரதமர் ஏமாந்துவிடக்கூடாது” என்று கருணாநிதி கூறினார்.
“உலகின் எல்லா நாடுகளிலுமே தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்த நாட்டு மக்களின் மீதே குண்டு மழை பொழிகிறார்களா?” என்று கேட்ட முதலமைச்சர், “இதை பிரதமர் இந்தியாவின் சார்பாக, இங்கே வேதனைப்படும் தமிழர்களின் சார்பாக இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காவிட்டால், பிறகு என்ன நடவடிக்கை என்பதை நாங்கள் யோசிப்போம் என்று பிரதமர் கூற வேண்டும். அதன்பிறகு நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்போம்” என்று கூறினார்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர் செல்வம், மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக வேண்டும் என்று பேசியதற்கு பதிலளித்த முதல்வர், தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை என்று கூறினார்.