சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் பலியாகியுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றிற்கு தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாக் நீரிணைப்புப் பகுதியில் சிறிலங்காக் கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூடுகளில் கொல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்ற அமைப்பின் இணைச் செயலர் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கொல்லப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் 14, 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாகும் என்று கூறியுள்ள அவர், சிறிலங்காக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், மாநிலக் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ள தகவலின்படி கடந்த 1986 இல் 10 ஆக இருந்த கொல்லப்பட்ட மீனவர் எண்ணிக்கை 1997 இல் 22 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல 1992இல் வெறும் 8 ஆக இருந்த காயமடைந்துள்ள மீனவர் எண்ணிக்கை 1996 இல் 36 ஆக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ள புகழேந்தி, மக்களைக் காக்கும் கடமையில் இருந்து தவறியுள்ள மத்திய, மாநில அரசுகள், நூற்றுக்கணக்கான மீனவர்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றவும் தவறிவிட்டன என்று குற்றம்சாற்றியுள்ளார்.
இந்த வழக்கை வியாழக்கிழமை அன்று விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே. கங்கூலி, நீதிபதி எஃப். எம். இப்ராகிம் கலிஃபுல்லா ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு, மத்திய, மாநில அரசுகளுக்குத் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.