சென்னையில் உள்ள அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலைக் காவலர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், இணை ஆணையர் (வடக்கு) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து ஆர்.சேகர் மாற்றப்படுகிறார். புதிய ஆணையராகத் தற்பொது குடிமைப் பொருள் வழங்குதுறை ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ள கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார்.
அதேபோல சட்டக் கல்லூரி அமைந்துள்ள வட சென்னைக் காவல்துறை இணை ஆணையர் அபய் குமார் சிங் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு, ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜி. பதவியில் அமர்த்தப்படுகிறார்." என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஊழல் தடுப்புப் பிரிவு இணை இயக்குநராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகரக் காவல்துறை (சட்டம்- ஒழுங்கு) கூடுதல் ஆணையராகப் பணியமர்த்தப்படுகிறார். இவர் வட சென்னை இணை ஆணையர் பதவியையும் கூடுதலாக வகிப்பார்" என்றும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக காவல் துறை உதவி ஆணையர் நாராயணமூர்த்தி, ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் பணியிடை நீக்கமும், பெண் ஒருவர் உள்ளிட்ட 4 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.