சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலைக் காவலர்கள் தடுக்காததுடன் அதை வேடிக்கை பார்த்த விவகாரம் தொடர்பாகச் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஆர்.சேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரக் காவல்துறையின் புதிய ஆணையராகத் தற்போது குடிமைப் பொருள் வழங்குதுறை டி.ஜி.பி.யாகப் பணியாற்றி வரும் கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படலாமென்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஏற்கெனவே இரண்டு காவல் அதிகாரிகளும், சட்டக் கல்லூரி முதல்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 4 காவல் அதிகாரிகள் புறநகர்ப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையில் நேற்று நடந்த மோதலில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது அருகில் இருந்த காவலர்கள் மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சட்டப் பேரவையிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மாணவர்களிடையே நடந்த மோதலை தடுக்க தவறிய கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே நடந்த மோதலின் போது உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை உதவி ஆணையர் நாராயணமூர்த்தி, ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் பணியிடை நீக்கமும், 4 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.