தமிழக முதல்வர் கருணாநிதியை விட, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அதிக மின்சாரம் பயன்படுத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி 2 மாதத்துக்கு சேர்த்து ரூ.15,000 மின் கட்டணம் செலுத்துவதாகவும், ஆனால் ஜெயலலிதா தனது போயஸ்கார்டன் வீட்டுக்கு மட்டும் ரூ.1,02,468 செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் ஜெயலலிதா 2 மாதத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
இவ்வாறு மின்சாரத்தைப் பயன்படுத்தி விட்டு ஜெயலலிதா, மின்தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக குறைகூறிய அமைச்சர், அ.இ.அ.தி.மு.க.வின் தொடர் போராட்டம் தமிழக மக்களை ஏமாற்றும் வேலை என்றும் கூறினார்.