சென்னை எருக்கஞ்சேரி அருகே இன்று அதிகாலை வன்முறை கும்பலைச் சேர்ந்த சிலர் அரசு பேருந்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.
கோயம்பேடு, பிராட்வே, திருவொற்றியூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து பணிமுடிந்த ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து எருக்கஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது பேருந்தை மறித்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் உருட்டுகட்டைகளுடன் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்ததுடன் பேருந்தில் இருந்த ஊழியர்களை இறங்கச் சொல்லி மிரட்டினர்
அவர்கள் இறங்குவதற்குள் அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பேருந்தின் மீது ஊற்றி தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதறிய பேருந்தின் ஓட்டுனர் மற்றும் ஊழியர்கள் உடைக்கப்பட்ட முன் பக்க கண்ணாடியை வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர். சில நிமிடங்களில் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.
இதையறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி எருக்கஞ்சேரியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்
புழல் பகுதியில் அம்பேத்கர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கும், சென்னை சட்டக்கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் பேருந்துக்கு தீவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.