சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதலை தடுக்க தவறிய அக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினருக்கிடையே நேற்று ஏற்பட்ட பயங்கர மோதலில் மாணவர்கள் ஒருவரையொருவர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.இதில் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலை தடுக்க தவறியதாக எழுந்த புகாரையடுத்து அந்த சட்டக்கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.