தமிழகத்தில் செயல்பட்டு வரும் அயல்நாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் வைக்க அனுமதிக்க மறுப்பது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க, அவைத்தலைவர் அனுமதியளிக்காததை அடுத்து இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் குறித்து விவாதிக்க அவைத்தலைவர் ஆவுடையப்பன் அனுமதி வழங்கினார்.
அப்போது இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எழுந்து, தாங்கள் கொடுத்த கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினர்.
ஆனால் அவைத்தலைவர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவையில் இருந்து வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்டு உறுப்பனிர் சிவபுண்ணியம் கூறுகையில், தமிழகத்தில் ஹூண்டாய் உள்பட அயல்நாட்டு நிறுவனங்கள் நிறுவனங்களில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.
அந்த நிறுவனங்களில் தொழிற்சங்கம் ஏற்படுத்த அனுமதி இல்லாததைப் பற்றி விவாதிக்க அனுமதி கேட்டோம். அவைத்தலைவர் மறுத்து விட்டதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.
இதே பிரச்சனைக்காக அவையில் இருந்து வெளியேறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதியும் தெரிவித்தார்.