சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை ஏற்று உடனே விவாதம் செய்ய அனுமதியளிக்காததால் அ.இ.அ.தி.மு.க ம.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் பிரச்சனை இன்று தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, சட்டக்கல்லூரியில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக உடனே விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார்.
இதற்கு அவைத்தலைவர் ஆவுடையப்பன் அனுமதியளிக்க மறுத்து, கேள்வி நேரம் முடிந்ததும் அந்த பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என்று கூறினார்.
ஆனால், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சட்டக் கல்லுரி பிரச்சினை குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பினார்கள்.
சட்டப்பேரவையில் மின்சாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. கொறடா கோரிக்கை வைத்துள்ளதால் கேள்வி நேரம் முடிந்ததும் முதலில் மின்சாரம் குறித்தும் பின்னர் சட்டக்கல்லூரி பிரச்சனை குறித்தும் விவாதம் நடைபெறும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து இதே பிரச்சனைக்காக ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.