சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டிருந்த காவல்துறையினரைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் கோவையில் இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சட்டக் கல்லூரியில் நேற்று இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் போர்க்களமாக காட்சியளித்தது. இதில் மாணவர்கள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினரைக் கண்டித்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கல்லூரியின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகளை உடைத்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பருவத்தேர்வுகள் நடைபெற்று வரும் வேளையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மதுரை, திருச்சி சட்டக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.