Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவ‌ர்க‌ள் மோத‌ல் : காவ‌ல்துறை‌யினரை ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் - ஜெ. ‌வ‌லியுறு‌த்த‌ல்!

மாணவ‌ர்க‌ள் மோத‌ல் : காவ‌ல்துறை‌யினரை ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் - ஜெ. ‌வ‌லியுறு‌த்த‌ல்!
, வியாழன், 13 நவம்பர் 2008 (11:29 IST)
செ‌ன்னை ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோதலை, திரைப்படக்காட்சியை பார்ப்பது போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனைத்துக் காவலர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வே‌ண்டு‌ம் எ‌‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இதுகு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நேற்று டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் படித்து வரும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரை, வேறு இனத்தைச் சேர்ந்த சக மாணவர்களே காவல் துறையினர் முன்பு மண்வெட்டி, இரும்பி கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன்.

தமிழ்நாட்டின் காவல் துறையின் மீது ஏற்கனவே மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள நிலையில், இது போன்ற வன்முறைக்காட்சிகள் மக்களின் மனநிலையை மேலும் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன.

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் கலவரம் வெடிக்கும்? எங்கு வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கும்? எங்கு மதக் கலவரங்கள் நடக்க வாய்ப்பு இருக்கும்? என்பதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து, அந்த இடத்திற்குத் தேவையான காவலர்களை அனுப்பி, இது போன்ற கலவரங்களை முளையிலேயே கிள்ளி எறியும் பணியை செய்ய வேண்டியது காவல் துறையின் தலையாய கடமை.

ஆனால் இன்று சட்டக்கல்லூரிக்கு வெளியே 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகனத்துடன் வெளியே நின்று கொண்டிருந்போதும், காவல் துறையினருக்கு எதிரே 10 அடி தூரத்தில் அங்கு நடைபெற்ற கொடூரச் சம்பவத்தை இரக்கமின்றி, திரைப்படக்காட்சியை பார்ப்பது போல காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இது போன்று வேடிக்கை பார்க்கத்தான் காவலர்கள் அங்கு அனுப்பப்பட்டனரா? வேடிக்கை பார்க்கும் காவலர்களுக்கு எதற்கு அரசு சம்பளம்? சட்டக் கல்லூரிக்கு வெளியே நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனைத்துக் காவலர்களையும், காவல் துறை அதிகாரிகளையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும்" எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil