பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே. அத்வானி சென்னையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு, திடீரென்று சென்ற எல்.கே.அத்வானி, சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அவருடன் பத்திரிகையாளர் சோவும் சென்றிருந்தார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினிகாந்துடன் அத்வானி பேசியதாகத் தெரிகிறது.
சந்திப்பின் போது அத்வானி எழுதிய புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பையும் ரஜினிகாந்துக்கு அவர் அளித்தார்.
புத்தக வெளியீடு: எல்.கே. அத்வானி எழுதிய சுயசரிதை புத்தகமான `எனது பாரதம், எனது வாழ்க்கை' என்ற புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த அத்வானி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தான் எழுதிய சுயசரிதை புத்தகம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டதாகவும், அதனை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்று எழுத்தாளர் சோ வலியுறுத்தியதையடுத்து, தற்போது அந்த நூல் தமிழில் வெளியிடப்படுவதாகவும் அத்வானி குறிப்பிட்டார்.
மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் நாட்டின் பல்வேறு தரப்பினரும் அவதிப்படுவதாக அத்வானி குறை கூறினார்.
தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதால் வன்முறைகள் அதிகரித்து பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருநத போது, மின்தட்டுப்பாடு இல்லாமல், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தி செயலாற்றியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.