சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் 3 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ளது டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 30ஆம் தேதி கல்லூரியில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அடிக்கப்பட்ட அழைப்பிதழில் அம்பேத்கர் பெயர் விடுபட்டது தொடர்பாக 2 பிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது. விழாவுக்கு அடுத்த நாள் முதல், செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் தேர்வு எழுதுவதற்காக மாணவ, மாணவிகள் நேற்று கல்லூரிக்கு வந்தனர். தேர்வு முடிந்து வெளியே வரும் ஒரு பிரிவினரை தாக்குவதற்காக மற்றொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே கல்லூரிக்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாலை 4.30 மணியளவில் தேர்வு முடிந்து மாணவர்கள் வெளியே வந்தபோது ஏற்கனவே தயாராக காத்திருந்த கோஷ்டியை சேர்ந்த மாணவர்களுக்கும், எதிர் தரப்பு மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
கத்தி, உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, மண்வெட்டி, டியூப் லைட், கற்கள் போன்ற கையில் கிடைத்த ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் மிக கொடுரமாக தாக்கிக்கொண்டனர்.
ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக் கொள்வதைப் பார்த்தும், காவல்துறையினர் கல்லூரிக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றிருந்தனர்.
ஒரு மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு மற்ற மாணவர்களை தாக்க ஓடினார் அப்போதும் காவல்துறையினர் வேடிக்கைப்பார்த்துக் கொண்ட அவலம் நீடித்தது. இதையடுத்து மற்ற பிரிவினர் அவரை ஓட ஓட விரட்டி தாக்கினர்.
கல்லூரி வாசல் அருகிலேயே 10 பேர் சேர்ந்து அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். அந்த மாணவர் உடல் அசைவற்று கீழே கிடந்த நிலையிலும் அவரை கட்டைகளால் பலமாக அடித்து தாக்கினர்.
இந்த தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில்தான் காவல்துறையினர் நின்று கொண்டிருந்தனர். ஆனால் இந்த சம்பவத்தை கண்டும் காணாதது போல அவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
இந்த மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தேவ் கூறியுள்ளார். மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த திடீர் மோதலால் கல்லூரி வளாகமே போர்க்கோலமாக காட்சியளித்தது.
மாணவகளிடையே நடந்த இந்த மோதலை காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்ததாக எழுந்த புகாரையடுத்து, சென்னை எஸ்பிளனேட் காவல் நிலைய உதவி ஆணையர் நாராயணமூர்த்தி, ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 உதவி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.