மின்வெட்டுப் பிரச்சனை குறித்து பேச அவைத்தலைவர் ஆவுடையப்பன் அனுமதியளிக்க மறுத்ததையடுத்து, அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
மின்வெட்டு குறித்து பேச அனுமதிக்குமாறு அ.இ.அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையனும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலபாரதியும் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதை ஏற்க மறுத்த அவைத்தலைவர் ஆவுடையப்பன் இது பற்றி நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார்.
ஆனால் தீர்மானத்தின் மீது இன்றே விவாதம் நடத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவைத்தலைவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.