இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாக சென்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது என்ற இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் இன்று தமிழக சட்டப்பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது.
அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சட்டப்பேரவை நோக்கிச் சென்று அதற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, இன்று காலை 10 மணியளவில் பெரியார் சிலை அருகே பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பழ.நெடுமாறன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.