இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் இளைஞர் எழுச்சி பாசறை சார்பில் வரும் 28ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் அமைப்பு சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, போர் நிறுத்தம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
தமிழகத்தில் ஏராளமான போராட்டங்கள் நடத்திய பின்பும் இந்திய அரசு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறிய அவர், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் இளைஞர் எழுச்சி பாசறை சார்பில் நவம் பர் 28ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று தெரிவித்தார்.
போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இலங்கைப் பிரச்சனையில் தான் தேசவிரோதமாக பேசுவதாகக் கருதினால் தன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும், மத்திய அரசு போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றியுள்ளார்.
தமிழர்களைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸ் கட்சி, இலங்கையின் இறையாண்மை பற்றி கவலைப்படுவதாகவும், போர் நிறுத்தம் ஏற்பட பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ள முதல்வரைப் பாராட்டுவதாகவும் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.