மின்வெட்டைக் கண்டித்து ஈரோட்டில் நாளை அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிகரிக்கும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு மின் உற்பத்தித்திறனை உயர்த்த வேண்டிய தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தித் திறனை படிப்படியாக குறைத்துக் கொண்டு, மின்வெட்டை உயர்த்திக் கொண்டே வருகிறது.
இதன் விளைவாக, ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறித் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தொடர் மின்வெட்டு காரணமாக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஜவுளி பதனிடும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலை, நார் தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலை, கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட காய்கறி இருப்புக் கிடங்கு உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாமல், மேற்படி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 15,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்புக்கும், ஊதிய இழப்புக்கும் ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
கடும் மின்பற்றாக்குறை காரணமாக போதுமான தண்ணீர் வசதி இல்லாததால், பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது தவிர, விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பரிதாப கரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட அனைத்து தரப்பினரும் மின்வெட்டின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து அ.தி.மு.க. ஈரோடு தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஈரோடு அரசு பொது மருத்துவமனை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.