தலைவர்கள், கடவுளின் சிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சேரங்குளம் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை கடந்த 10ஆம் தேதி சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தியை அறிந்தவுடன், இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.காமராஜ் தலைமையில் கழக உடன்பிறப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், சேரங்குளம் ஊராட்சி தொடர்ந்து அ.தி.மு.க. வசம் இருந்து வருவதால், அ.தி.மு.க.வினரை அச்சுறுத்தும் வகையில் சில தி.மு.க. விஷமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்த கழகத்தினர் சந்தேகிக்கின்றனர்.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 29 மாத காலத்தில், இதே போன்று பல தலைவர்களின் சிலைகள், கடவுளின் சிலைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
தமிழகத்தில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள தலைவர்களது சிலைகள் சேதப்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று நான் ஏற்கெனவே பல முறை தி.மு.க. அரசை வலியுறுத்தி வந்த போதிலும், இது குறித்து முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதன் காரணமாகத் தான், தொடர்ந்து இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே, முதல்வர் கருணாநிதி, தலைவர்கள் மற்றும் கடவுளின் சிலைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.