சென்னையில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் அன்னியச் செலாவணி சேவை துவக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, எச்.டி.எப்.சி வங்கியுடன் இணைந்து அன்னியச் செலாவணி வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில், இச்சேவை, கடந்த ஏப்ரல் 2008-ல் சென்னை ஜி.பி.ஓ, தி.நகர், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்திலும் 10.11.2008 முதல் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட அலுவலகங்களில் அன்னியச் செலாவணி நோட்டுகளை வாங்கவும், விற்கவும் முடியும். மேலும் பயணி காசோலைகள், ப்ரீ பெய்டு கார்டுகள் போன்றவற்றையும் வாங்கலாம்.
இந்திய அஞ்சல் துறை தற்போது ரிலையன்ஸ் மணி லிமிடெட் உடன் இணைந்து 99.99 % சுத்தமான, 24 கேரட் தங்கக் காசு விற்பனையிலும் இறங்கியுள்ளது. 0.5 கிராம், 1 கிராம், 5 கிராம் மற்றும் 8 கிராம் தங்கக் காசுகள் 20 குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் விற்கப்படுகின்றன.
தங்கக் காசு விற்பனைக்கு பொது மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பையும், பண்டிகை மற்றும திருமண விழாக் காலத்தையும் கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் மணி லிமிடெட் 5 % தள்ளுபடி சலுகையை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.