சிறிலங்க கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும், பலியான மீனவர்கள் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தாக்குதல் நடக்கிறது.
சில நேரங்களில் மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆண்டு தோறும் இது அதிகரித்து வருகிறது. இந்திய மீனவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டது.
இந்திய மீனவர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்று இரு நாடுகளும் கூட்டறிக்கை விடுத்தன. ஆனால் இது மீறப்பட்டுள்ளது. மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பலியான மீனவர்கள் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.