இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. கட்சிகள் தமிழக சட்டப் பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தன.
இதேபோல், பசும்பொன்னில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவின் கார் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரியும் அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பரபரப்பான சூழ்நிலையில் நேற்று கூடிய தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வீர.இளவரசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை அவை கூடியதும் கேள்வி நேரத்துக்குப் பின்னர், இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வலியுறுத்தியும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிடாததைக் கண்டித்தும் சட்டப்பேரவையில் பேசுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. கட்சி சார்பில் அவைத்தலைவரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால், அவைத்தலைவர் ஆவுடையப்பன் இதற்கு அனுமதியளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல், பசும்பொன்னில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவின் கார் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரியும் அக்கட்சி சார்பில் பேச அனுமதி கோரப்பட்டது.
இதற்கும் அவைத்தலைவர் அனுமதியளிக்காததால் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.