சிவகங்கை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக வழங்கப்படாததைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட புதுவயல், கண்டனூர், பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு தேவகோட்டை மின் நிலையம், மேலமணக்குடி துணை மின் நிலையம், காணாடுகாத்தான் துணை மின் நிலையம் ஆகியவற்றின் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
தற்போது கடும் மின்வெட்டு காரணமாக, மேற்படி மின் நிலையங்களில் இருந்து அரிசி ஆலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த மின்சாரம், ப.சிதம்பரத்துக்கு வேண்டியவர்கள் நடத்தும் சித்திவயலில் உள்ள 2 அண்ணாமலை காகித ஆலைகள் மற்றும் ஊரவயலில் உள்ள அண்ணாமலையார் காகித ஆலைக்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படுகிறது.
ப.சிதம்பரத்தின் தன்னலப்போக்கு காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நெல்லை அரிசியாக ஆக்க முடியாத நிலைக்கு அரிசி ஆலைகள் தள்ளப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் 10 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக அரிசி ஆலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டும் அல்லாமல், காரைக்குடி அமராவதி புதூர் தொழிற்பேட்டையில் உள்ள காகித கப், ஸ்டீல் பர்னிச்சர், லெதர் பெல்ட் தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரியக்குடியில் உள்ள வெண்கல, பித்தளை விளக்கு தொழிற்சாலைகள், கண்டனூர், காரைக்குடி, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ளி பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள், தங்க நகைத் தொழிற்கூடங்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மேற்படி தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணியளவில், சாக்கோட்டை ஒன்றியம், புதுவயலில் உள்ள புதிய பேருந்து நிலைய நெல்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.