தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு தலைவராகும் தகுதி இல்லை என்றும் பா.ம..க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அரசியல் அவருக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்று அவருக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.
ரஜினி ஒரு நல்ல நடிகராக இருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர் ரஜினிகாந்தால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் எனவே அவர் அரசியலில் இறங்க கூடாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துக்கு தலைவராகும் தகுதியோ, அரசியல் நடத்தும் தகுதியோ இல்லை என்று கூறிய அவர், விஜயகாந்திடம் அரசியல்வாதி அந்தஸ்து, கட்சி நடத்தும் தகுதி எதுவுமே இல்லை என்றும் குறை கூறினார்.
திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைக்கும் முட்டாள்தனமான நடவடிக்கை இந்தியாவில் மட்டும் தான் உள்ளதாக கூறிய அவர், ரசிகர் மன்றத்தை நடிகர்கள் அரசியல் கட்சிகளாக மாற்றுவதாகவும் குற்றம் சாற்றினார்.
ரசிகர் மன்றத்தை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி கொள்வதாகவும், அப்பாவி இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஏமாற்றப்படுவதாகவும் கூறிய அவர் இது மன்னிக்க முடியாத தவறாகும் என்றார்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் அதை தான் எதிர்க்கவில்லை என்றும் கூறிய அவர், அரசியல் கட்சி நடத்துவது என்றால் அந்த கட்சிக்கு சிந்தனைகள், கொள்கைகள், திட்டங்கள், இலக்குகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். தனது கட்சியை தொடங்குவதற்கு முன்பே அரசியலில் இருந்ததாக கூறிய அவர் எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் காலங்கள் வேறு என்றும் தற்போதுள்ள நிலை வேறு என்றும் கூறினார்.
எந்த ஒரு மக்கள் பணியும் செய்யாமல் கோடம்பாக்கத்தில் இருந்து நேராக கோட்டைக்கு சென்று விடலாம் என்று நடிகர்கள் கனவு காண்பதை ஏற்க முடியாது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை எப்படியாவது அரசியலுக்கு அழைத்து வந்து விடவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ள நிலையிலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், 'பிரஜா ராஜ்யம்' கட்சித் தலைவருமான சிரஞ்சீவி ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான தருணம் என்றும் கூறியுள்ள நிலையில் டாக்டர் ராமதாஸ் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.