தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறினார்.
இதில் உரிய ஆவணங்கள் உள்ள 6 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறிய அவர், இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 4 லட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.
நவம்பர் 10 ஆம் தேதி முதல், வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் இதில் திருத்தம் செய்யவும், புதிதாக பெயரை சேர்க்கவும் விரும்புவோர், வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.
மேலும், நவம்பர் 16, 23ஆம் தேதிகளில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடப்பதாக கூறிய அவர், சென்னை, காஞ்சீபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 17ஆம் தேதி பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.
இந்த 3 மாவட்டங்களிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள், டிசம்பர் 2ஆம் தேதி என்று குறிப்பிட்ட அவர், இங்கு நவம்பர் 23,30 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று நரேஷ் குப்தா தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மதுரை திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்பட்டுள்ள காலியிடம் குறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், தேர்தல் எப்போது நடத்தலாம் என தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் கூறினார்.