இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்திம் வருகின்றன.
நார்வே நாட்டின் முயற்சியால் 2002ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை 2008ஆம் ஆண்டு ரத்து செய்ததாக இலங்கை அரசு அறிவித்தது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு மக்களுக்கு எதிரான போரை அந்த நாட்டு அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள் மடிந்து வருகிறார்கள். அவர்கள் படும் வேதனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. போரினால் தமிழர்கள் படும்பாடுகளை, கேள்விப்பட்ட தமிழக மக்கள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அதிபரிடம் பேசி உடனடியாக போரை நிறுத்த நீங்கள் (பிரதமர்) உங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு தாங்கள் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர். எனவே இலங்கை அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இந்த பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி இலங்கையில் நடந்து வரும் போரினை நிறுத்த தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.