ம.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் வீர. இளவரசன் மறைவு குறித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட இரங்கல் தீர்மானம் மீது கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்புத் தரப்படவில்லை என்று அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவர் மு.கண்ணப்பன் குற்றம் சாற்றியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த மு.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப்பேரவையில் இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பும், வீர.இளவரசன் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் வாசித்து 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பொதுவாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை அவைத்தலைவரே கொண்டு வந்து, அதனை முன்மொழிந்து அனைத்துக் கட்சி தலைவர்களையும் பேசச்சொல்லி பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுதான் மரபு என்றும் கூறினார்.
ஆனால், கட்சித் தலைவர்கள் யாருக்கும் வாய்ப்பு தராமால், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது போலவே வீர.இளவரசனுக்கும் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது தங்களுக்கு மன வேதனையையும், வருத்தத்தையும் அளித்துள்ளதாக கண்ணப்பன் கூறினார்.