ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது, சொத்து வரி உயத்தப்பட்டதைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜபாளையம் நகராட்சியில், பல்வேறு முறைகேடுகளுக்கு இடையில், 11.9.2008 அன்று புதிய பேருந்து நிலையம் உள்ளாட்சித் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இப்புதிய பேருந்து நிலையம் திறந்ததன் விளைவாக, மக்களின் விருப்பத்திற்கு எதிராக காந்திஜி பழைய பேருந்து நிலையத்தை நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வரப்பெற்றுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் நகராட்சி எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது என்றும், பைபாஸ் சாலை வசதி இல்லை என்றும், சாலையோரங்களில் மின் வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய பேருந்து நிலையம் செயல்படாததால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். எப்போதும் போல் பழைய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள பொது நல அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தி.மு.க. அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
சொத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நாளை (11.11.2008) காலை 10 மணியளவில், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.