தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அவைத்தலைவர் ஆவுடையப்பன் அறிவித்துள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை கூடிய தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர், மறைந்த ம.தி.மு.க. உறுப்பினர் வீர.இளவரசன் உள்பட 6 உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து, அவைத்தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் ஆவுடையப்பன், சட்டப்பேரவை கூட்டத்தை 14ஆம் தேதி வரை (வெள்ளிக்கிழமை) நடத்த சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
11ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் 2008-2009ஆம் ஆண்டின் கூடுதல் செயலர்கள் முதல் துணை நிதி நிலை அறிக்கை பேரவையில் வைக்கப்படும் என்றும் 12ஆம் தேதி (புதன்கிழமை) துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மாநில கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்றும் கூறினார்.
13ஆம் தேதி (வியாழக்கிழமை) மாநில கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்த அவர், 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாநில கோரிக்கை மீதான விவாதமும் அதன் மீதான பதில் உரையும் இருக்கும் என்றும் மாநில கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பின்னர் மாநில கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்து ஆய்வு செய்தபின் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
இது தவிர சட்ட முன் வடிவுகளும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுவதாக கூறிய அவர், வரும் 11, 12, 13, ஆகிய 3 நாட்களும் சட்டப்பேரவை நடக்கும் போது கேள்வி நேரம் இருப்பதாகவும், 14ஆம் தேதி கேள்வி நேரம் கிடையாது என்றும் கூறினார்.
தினமும் காலை 9.30 மணிக்கு கூடும் சட்டப்பேரவை கூட்டம் மதியத்துக்கு பிறகு கிடையாது என்றும் ஆவுடையப்பன் தெரிவித்தார்.