விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசு, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்திய கம்யூனிஸ்டு கட்சியால் நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே இலங்கை அரசு படைகளுடன் மோதிக்கொண்டிருக்கும், மறுதரப்பின் நிலையை தெளிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி பகிரங்க வேண்டுகோளை விடுத்தது.
போராடி வரும் தமிழ் மக்களின் பிரநிதிகளும், குறிப்பாக விடுதலைப்புலிகளும், போர் நிறுத்தம் குறித்து கருத்தை வெளியிட வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டோம். இந்த செய்தியை கண்டவுடன் 7ஆம் தேதி இரவே இணையதளத்தின் மூலம் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமை பொறுப்பாளர் பி.நடேசன் திட்டவட்டமான பதிலை வெளியிட்டுள்ளார்.
முதல் தேவை போர் நிறுத்தமே என்பதை விடுதலைப்புலிகள் தொடக்கம் முதல் வற்புறுத்தி வருவதாக கூறும் நடேசன், "இலங்கை அரசுதான் படைகொண்டு போரை நடத்தி வருகிறது. தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள மட்டுமே தமிழ் மக்கள் போராடி வருகிறோம். எனவே இலங்கை அரசு போரை நிறுத்தினால் தாங்களும் தற்காப்பு போர் நடத்தி வருவதையும் நிறுத்தி விடுவோம்" என்று கூறுகிறார்.
இதன் மூலம் விடுதலை புலிகளும் போர் நிறுத்தத்திற்கு தயார் என்பது தெளிவாகி விட்டது. எனவே இந்த அறிவிப்பினை அடிப்படையாக கொண்டு இந்திய அரசு, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்.
உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு, மக்களுக்கு எதிரான போரை பல நாட்டுப்படைகள் ஆயுத உதவிகளுடன் இலங்கை அரசு நடத்தி வருகிறது. எனவே பொறுப்புள்ள ஒரு அரசு என்ற முறையில் இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். இந்திய அரசு அதை வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப்புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித்தீர்வுக்கு வழிக்காண இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைப்புலிகள் போர் நிறுத்த வேண்டும் உடன்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததை வரவேற்பதுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கு முன் வரவேண்டும் என்று இந்திய மக்கள், தமிழ் மக்கள் சார்பில் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
இலங்கை தமிழ் மக்களின் மனித, அரசியல் உரிமைகளை பெற்று கொடுக்க உலக மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். தடைகளை தாண்டி போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மீண்டும் உறுதி தந்த விடுதலைப்புலிகளின் இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராட்டுகிறது" என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.