தமிழீழ பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் தடை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
பின்னர் மதுரையில் நேற்று மரணமடைந்த சட்டப்பேரவை உறுப்பினர் வீர.இளவரசன் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
இந்த கூட்டத் தொடரில், தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி, புறநகர் காவல்துறை ஆணையர் ஆணையம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டதிருத்த ஆணை, விற்பனை வரி சட்டம் உள்பட 10 அவசர சட்ட ஆணைகளுக்கான சட்ட முன் வடிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து சட்டமாக்கப்படும்.
சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்களுக்கு இந்த சட்டசபை கூட்டத்தை நடத்துவது, என்னென்ன அலுவல்களை ஏற்பது என்பது பற்றி நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படும்.
வைகோ கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டது, விலை வாசி உயர்வு, மின்சார வெட்டு, இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற் படை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது, உத்தப்புரம் கலவரம், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடாகவின் எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளையும் இந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் எழுப்ப முடிவு செய்துள்ளன.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறிய பின்பு நடைபெறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இதுவாகும்.