இலங்கைப் பிரச்சினையில் தமிழக முதல்வர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைகூறியிருக்கிறார்.
சென்னையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலுவைச் சந்தித்த பின் அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
இலங்கையில் போர் நிறுத்தம் என்பது அந்நாட்டு அரசுக்கு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது சரியல்ல என்று ராமதாஸ் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பது இலங்கை ராணுவம்தான். எனவே இலங்கை அரசுதான் முதலில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இலங்கைப் பிரச்னையைப் பொருத்த வரையில் கருணாநிதி தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார் என்றார்.
பாமக-வைப் பொருத்தவரை விடுதலைப்புலிகள் விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் பா.ம.க.வுக்கு நேரடியாகவோ, மறைமுகவோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் போராளி அமைப்பாக இன்று விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே உள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.
அதனால்தான் நார்வே தூதுக்குழு உள்பட பலரும் விடுதலைப் புலிகளுடன் பேசுகின்றனர். அந்த வகையிலேயே விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பா.ம.க. ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே-விடம், பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து வலியுறுத்திப் பேசுவார் என நம்புகிறோம் என்றார் ராமதாஸ்.