ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஜப்பான் அரசிடம் இருந்து ஏற்கனவே நிதியுதவி பெறப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கவிருப்பதை முன்னிட்டு முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல் அமைச்சர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டில் இருந்து ஏற்கனவே நிதியுதவி பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கக்கூடாது என்று ஜப்பான் நாட்டிற்கு நேரடியாக கடிதம் எழுத இருப்பதாக கர்நாடக பாசனத்துறை அமைச்சர் பஸவராஜ் கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் ஒகேனக்கல் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் கர்நாடக அமைச்சர் கூறியிருந்தார்.
இதுபற்றி பதிலளித்த முதல் அமைச்சர் கருணாநிதி, ஜப்பான் நாட்டிடம் இருந்து நிதியுதவி வந்துள்ளதாகவும், ஒகேனக்கல் பகுதியில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
எனவே திட்டமிட்டபடி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.