மதுரை திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ம.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் (எம்.எல்.ஏ.) வீர. இளவரசன் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடுமையான மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட வீர.இளவரசன், உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கிப்பட்டார்.
இன்று காலை அவரது உடல்நிலை மீண்டு கவலைக்கிடமானது. இதைக் கேள்விப்பட்டதும் மதுரையில் தங்கியிருந்த வைகோ உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
இந்நிலையில் இன்று காலை 10.40 மணியளவில் வீர.இளவரசன் மரணமடைந்தார். அவருக்கு வயது 48. இதையறிந்ததும் வைகோவும், ம.தி.மு.க. தொண்டர்களும், வீர.இளவரசனின் உறவினர்களும் கண்கலங்கினர்.
முதுகலைப் பட்டதாரியான வீர.இளவரசன், கல்லூரியில் படிக்கும் போது தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டு அக்கட்சியின் மாணவர் அணி அமைப்பாளராக செயல்பட்டார்.
தி.மு.க.வை விட்டு வெளியேறிய வைகோ, ம.தி.மு.க.வை தொடங்கிய போது வீர.இளவரசனும் வைகோவுடன் இணைந்தார். கடந்த 1989-ஆம் ஆண்டு மேலூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார். 2001-ம் ஆண்டு மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வீர.இளவரசனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் கொட்டாம் பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டி ஆகும். தந்தை வீரப்பன் சேர்வை. தாயார் வள்ளியம்மாள்.
இவருக்கு மாணிக்கவல்லி என்ற மனைவியும், விஜயாலன், சக்கரவர்த்தி ஆகிய மகன்களும், யாழினி என்ற மகளும் உள்ளனர்.
2006-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வீர. இளவரசன் மதுரை திருமங்கலம் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.