மதுரை அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.திருப்பதியைக் கொண்ட தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள உத்தரவில், "மதுரை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.திருப்பதியைக் கொண்ட தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது.
இந்த ஆணையம் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான சூழ்நிலை குறித்தும், துப்பாக்கி சூடு நடத்த வேண்டியது அவசியம்தானா என்பது பற்றியும், நிலைமையை காவல்துறையினர் கட்டுப்படுத்துவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தும்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும், அதற்கான பரிந்துரைகளையும் அரசுக்கு அளிக்கும். இந்த விசாரணை ஆணையம் 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டது. இதையடுத்து இ.கோட்டைபட்டி என்ற இடத்தில் நடந்த மோதல், கலவரத்தை கட்டுப்படுத்தவும், கூட்டத்தைக் கலைக்கவும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுரேஷ் என்ற வாலிபர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.