இலங்கை பிரச்சனை குறித்து வரும் 10ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எழுப்ப இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில செயலர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சமீபகாலமாக படுகொலைகள், குறிப்பாக அரசியல் படுகொலைகள் மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் கடுமையான மின்வெட்டால் தொழிற் கூடங்கள், விவசாய உற்பத்தி மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலையும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அங்கு தமிழர்கள் படுகொலை நிறுத்தப்பட உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அமைதியான சூழ்நிலையில் இனப்பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
வரும் 10ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், இப்பிரச்சினைகளை எழுப்ப இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 18ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.