தி.மு.க., பா.ம.க. இடையே மீண்டும் நட்புறவை ஏற்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து சமரசம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
திண்டிவனம் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாசை சந்தித்துப் பேசிய அமைச்சர் டி.ஆர். பாலு, தி.மு.க.-பா.ம.க. கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த சமரச பேச்சு வார்த்தையின் போது டாக்டர் ராமதாஸ், டி.ஆர்.பாலு இருவரும் கடந்த காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றி மனம் விட்டுப் பேசியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் கருணாநிதியும், டாக்டர் ராமதாசும் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தமிழர்கள் நலனுக்காக இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானது என்றும் அப்போது ராமதாசிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
மேலும், முதல்வர் கருணாநிதியை டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேச வரவேண்டும் என்று டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்ததாகவும் இதன் மூலம் தி.மு.க.-பா.ம.க. இடையே ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து விட முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து டி.ஆர். பாலுவின் சமரச முயற்சிக்கு நன்றி தெரிவித்த டாக்டர் ராமதாஸ் இது தொடர்பாக பா.ம.க. மூத்த தலைவர்களிடமும், மற்ற கட்சி நண்பர்களிடமும் பேசி விவாதித்து முடிவு எடுக்க விரும்புவதாகவும், தி.மு.க.வுடன் நட்பைப் புதுப்பித்து, மீண்டும் தோழமை ஏற்படுத்திக் கொள்ள சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் டி.ஆர். பாலுவின் இந்த திடீர் சமரச முயற்சியால் தி.மு.க.-பா.ம.க. இடையே மீண்டும் நட்பு ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளதாக அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும், சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு நிலம் கையகப்படுத்தியது, ஆறுகளில் மணல் எடுப்பது மற்றும் மின் வெட்டு, விலைவாசி உயர்வு பிரச்சினைகளில் தி.மு.க.-பா.ம.க. இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த பிரச்சனைகள் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்த பரபரப்பு பேட்டி, அறிக்கை மற்றும் காடுவெட்டி குருவின் தி.மு.க. எதிர்ப்பு பேச்சு காரணமாக தி.மு.க. தலைவர்கள் வருத்தம் அடைந்தனர். இந்த மோதல்கள் காரணமாக தி.மு.க.-பா.ம.க.உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜுன் 17ஆம் தேதி தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க.வை விலக்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.