ஈரோடு: பெருந்துறை ஆள்கடத்தல் வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் உட்பட ஏழு பேர் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையிடம் சரணடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி மற்றும் அவர் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா துண்டுதல் பேரில் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் எதிரொலியாக அமைச்சர் பதவியில் இருந்து என்.கே.கே.பி.ராஜா நீக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தி.மு.க.வினர் உட்பட எட்டு பேரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். மேலும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன் மகன் ராஜேந்திரன், நல்லம்பட்டி பேரூர் கழக செயலாளர் தவசியப்பன், நகர இளைஞர் அணி செயலாளர் முருகராஜன் உட்பட ஏழு பேர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. காவல்துறையிடம் இந்த ஏழுபேரும் சரணடைந்தனர். பின்னர் இவர்கள் பெருந்துறை நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர் செய்யப்பட்டனர். நீதிபதி வேலுமணி இவர்களை பதினைந்து நாள் காவலில் வைக்க உத்திவிட்டார்