அரசுத் துறை நிறுவனங்கள் எதுவும் இதுவரை வழங்காத அளவில் 14 கோடியே 48 லட்சம் ரூபாய் ஆதாயப் பங்குத் தொகையை முதல்வர் கருணாநிதியிடம் சிப்காட் நிறுவனம் வழங்கியுள்ளது.
சிப்காட் நிறுவனம் 2007-2008 ஆம் நிதியாண்டில், முந்தைய ஆண்டினைவிட அதிகமாக 364 கோடியே 93 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி, நிகர இலாபமாகிய 96 கோடியே 66 லட்சம் ரூபாயில் 25 விழுக்காடு ஆதாயப் பங்குத் தொகையை தமிழக அரசுக்கு வழங்கிட முடிவு செய்தது.
அதன்படி, 14 கோடியே 48 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை முதல்வர் கருணாநிதியிடம் சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ந.கோவிந்தன் இன்று வழங்கினார்.
இதன்மூலம், தமிழக அரசு நிறுவனங்கள் சார்பாக இதுவரை எந்த ஆண்டிலும் வழங்கப்படாத அளவுக்கு மிக அதிகமான ஆதாயப் பங்குத் தொகையை தமிழக அரசுக்கு வழங்கி சிப்காட் நிறுவனம் மகத்தான சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.