வருகிற 10ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 10 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 10ஆம் தேதி தொடங்குவதாகவும், முதல் நாள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்றார்.
இதையடுத்து வினா-விடை நேரம் இடம் பெறும் என்றும் பின்னர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படும் என்றும் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
தமிழக அரசு தற்போது மதிப்பு கூட்டுவரி, புறநகர் காவல்துறை ஆணையம், பஞ்சாயத்து சட்ட திருத்த ஆணை, விற்பனை வரி சட்டம் உள்பட 10 அவசர சட்ட ஆணைகளை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்த அவைத் தலைவர் ஆவுடையப்பன், இதற்கான சட்ட முன் வடிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து சட்டமாக்கப்படும் என்றார்.
முதல் நாள் கூட்டத்தில் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அலுவலர் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது என்னென்ன அலுவல்களை ஏற்பது என்பது பற்றி முடிவு செய்யும் என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் கூறினார்.