கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்தும், மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. ஒரு நாளைக்கு புறநோயாளிகளாக கிட்டத்தட்ட 2,000 பேர் வந்து செல்கின்ற இந்த மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்குத் தேவையான சி.டி. ஸ்கேன், நவீன நுண்கதிர் இயந்திரம், நவீன வசதிகளுடன் கூடிய ரத்தப் பரிசோதனைக்கூடம், போதுமான இடவசதி ஆகியவற்றை தி.மு.க. அரசு ஏற்படுத்தவில்லை. நோயாளிக்கு ஏற்ப பணியாளர்களும் மேற்படி மருத்துவமனையில் நியமிக்கப்படவில்லை.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீரை மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றுவதற்கு 20 மணி நேரம் மின்சாரம் இருக்க வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட 20 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதன் விளைவாக, மக்களுக்கு மிகவும் இன்றியமையாத குடிநீரை சரிவர விநியோகிக்க முடியாமல் நகராட்சி திணறுகிறது.
இதனைக் கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை (8ஆம் தேதி) காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.