தமிழகம் முழுவதும் புதிதாக மேலும் 100 கிளை நூலகங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கரூர் நகரில் ரூ.74 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மாவட்ட மைய நூலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், பள்ளிக்கல்வித் துறை சார்பில், கரூர் மாவட்டத்துக்கு ரூ.14 கோடியில் கூடுதல் வகுப்புகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன என்றார்.
மேலும், இம்மாவட்டத்தில் உள்ள நடு நிலைப்பள்ளிகளின் பழுதுபார்ப்பு, புதுப்பிக்கும் பணி, ஆய்வகங்களுக்காக ரூ.2.50 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தமிழகத்தில் நூலகங்களுக்குத் தற்போது ரூ.25 கோடியில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புத்தகச் சந்தைகளில் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஊர்ப்புற நூலகர்கள் ரூ.1,500 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாக கூறிய அவர், தமிழக முதல்வரிடமிருந்து அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.